ஞாயிறு, 19 மார்ச், 2017

கி.ஆ.பெ.விசுவநாதம் திராவிட எதிர்ப்பு 30 பதில்கள் தனித்தமிழ்நாடு

aathi tamil aathi1956@gmail.com

19/12/16
பெறுநர்: எனக்கு
Kathir Nilavan.
"முத்தமிழ்க் காவலர்" கி.ஆ.பெ. விசுவநாதம் நினைவு நாள்
19.12.1994
1. தமிழ் என்பது ஒரு நல்ல தமிழ்ச் சொல். திராவிடம் என்பது அழுத்தமான வடமொழிச் சொல்
.2. திராவிடம் என்ற சொல்லே திரிந்து "தமிழ்" என்று ஆயிற்று என்பது தமிழ்
பற்றாளர் சிலரது கூற்று. இது அவரவர் மொழிப்பற்றை காட்டுமேயன்றி உண்மையைக்
காட்டாது-
3. பழைய சங்க காலத்திய தமிழ் நூல்கள் அனைத்திலும் "திராவிட" என்ற சொல்
ஒன்று கூட இல்லை.
4. சங்க காலத்திற்குப் பின்னும், 700 ஆண்டுகளுக்கு முன்னும் தோன்றிய
இன்றும் இருக்கும் எந்த நூலிலும் திராவிடம் என்ற சொல் இல்லை.
5. 650 ஆண்டுகளுக்குப் பிற்பட்ட வரலாற்று காலத்தில் தான் வரலாறு எழுதிய
ஆங்கிலேயரும், ஆங்கிலேயரைப் பின்பற்றி ஆரியரும் தமிழரை தமிழ் நாட்டை
தமிழ்மொழியை மட்டுமல்லாமல் தமிழ் இனத்தையும், தமிழ் இனத்தின் மொழிகளையும்
சேர்த்து "திராவிடம் " எனக் குறிப்பிட்டு இருக்கின்றனர்.
6. தமிழருக்கும், தமிழ் இனத்தாருக்கும் திராவிடர் எனப் பெயரிட்டு வரலாறு
எழுதிய ஆங்கிலேயருக்கு அறிவித்தவர்கள் அக்காலத்தில் நன்கு கற்றறிந்த
ஆரியர்களே!
7. "தமிழ்" என்ற தமிழ்ச் சொல்லிற்கு தம்மிடத்தில் "ழ்" ஐ உடையது.
(தம்+ழ்) என்பது பொருள். "திராவிடம்" என்ற வடசொல்லிற்கு குறுகிய விடம்
என்றும் திராவிடர் என்ற சொல்லிற்கு குறுகியவர்-அல்லது குறுகிய
புத்தியுள்ளவர் என்றும் பொருள்.( திராவி- அற்பம், குறுகல் )
8. தமிழ்நாடு என்பது தமிழ்நாட்டை மட்டுமே குறிக்கும் - திராவிட நாடு
என்பது ஆந்திரா, மலையாளம், கன்னடம், துளுவ நாடுகளையும் சேர்த்துக்
குறிக்கும்.
9. தமிழ்நாடு என்று ஒரு தனி நாடும்; தமிழ் மொழி என்று ஒரு தனி மொழியும்
உண்டு. திராவிட நாடு என்று ஒரு தனி நாடும், திராவிட மொழி என்று ஒரு தனி
மொழியும் இல்லை.
10. தமிழ்நாடு , தமிழ் மொழி எனக் கூறலாம்- ஆனால் திராவிட நாடு, திராவிட
மொழி எனக் கூற இயலாது. திராவிட நாடுகள், திராவிட மொழிகள் என்றே கூறியாக
வேண்டும்.
11. தமிழ்நாட்டு எல்லை வரையறுத்துக் கூறப்பட்டிருக்கிற ஒன்று. திராவிட
நாட்டின் எல்லை இதுவரை எவராலும் வரையறுத்து கூறப்படாத ஒன்று. ஒரு நாள்
இந்திய மலை வரையில், மற்றொரு நாள் அசாம் வரையில், வேறொரு நாள் இந்தியா
முழுவதுவமே "திராவிட நாடு" கூறப்பட்டதும் உண்டு..
12. தமிழ் என்றால் திராவிடம் தான், திராவிடம் என்றாலும் தமிழ் தான்,
தமிழர் என்றால் திராவிடர் தான், திராவிடர் என்றாலும் தமிழர் தான்,
தமிழ்நாடு என்றால் திராவிடநாடு தான். திராவிட நாடு என்றாலும் தமிழ்நாடு
தான் "அந்தக் கருத்தில்தான் அப்படிச் சொல்லப்பட்டு வருகிறது" என்பதில்
புரட்டு இருக்குமே தவிர உண்மை இருக்காது.
13. தமிழர் என்று எழுதி (திராவிடர் ) என்று கூட்டுக்குள் போடுவதும்,
தமிழ்நாடு என்று எழுதி (திராவிட நாடு ) என்று கூட்டுக்குள் போடுவதும்,
பிறகு திராவிடர் ( தமிழர்) என்று எழுதி கூட்டுக்குள் போடுவதும் , திராவிட
நாடு ( தமிழ் நாடு) என்று எழுதி கூட்டுக்குள் போடுவதும் தவறான
எழுத்தாகுமேயன்றி நேர்மையான எழுத்தாகாது.
14. தமிழ்நாட்டைத் தாய்நாடாகக் கொண்டு, தமிழ்மொழியைத் தாய் மொழியாகக்
கொண்டு, தமிழ்ப் பண்பை தாய்ப்பண்பாகக் கொண்டு வாழ்பவர் அனைவரும் தமிழரே
என்பது ஜாதி பேதமற்று உறுதி செய்யப்பட்டு விட்டது. ஆனால் திராவிடர் யார்?
என்பது இன்னும் உறுதி செய்யப்படாமலே இருந்து வருகிறது. ஒரு நாள்
மகாராஷ்டிரரும் திராவிடர் என்றும், மற்றொரு நாள் வங்காளிகளும் திராவிடர்
என்றும், வேறொரு நாள் "ஆரியர் தவிர அனைவரும் திராவிடரே" என்றும்
சொல்லப்பட்டு வந்திருக்கிறது.
15. தமிழ்மொழி ஒன்று மட்டுமே தனித்து நிற்க எழுதப்பேச, இயங்க
ஆற்றலுடையது. இத்தகைய ஆற்றல் தமிழ் ஒழிந்த திராவிட மொழிகளில் எதற்கும்
இன்று இல்லை.
16. திராவிட மொழிகள் பலவும், வடமொழியோடு சேரச் சேர பெருமையடைகின்றன!
தமிழ்மொழி ஒன்று மட்டுமே வடமொழியிலிருந்து விலக, விலக பெருமையடைகிறது!
17. தமிழ்நாடு ஒன்று மட்டுமே பிரிந்து வாழும் தகுதியையும் சிறப்பையும்
பிற அமைப்பையும் உடையது. திராவிட நாடுகளில் எதுவும் இத்தகைய நிலையில்
இன்று இல்லை.
18. தமிழ் மக்களுக்கு மட்டுமே வட நாட்டிலிருந்து பிரிந்து தனித்து வாழ
வேண்டும் என்ற உணர்ச்சி இருந்து வருகிறது. இத்தகைய உணர்ச்சியில்
சிறிதளவாவது பிற திராவிட மக்களிற் பலரிடத்திலும் காண முடியவில்லை.
19. "தமிழ்நாடு தமிழருக்கே" என்பது தமிழ்மக்களின் பிறப்புரிமையாக
இருக்கும். "திராவிடநாடு திராவிடருக்கே" என்பதுவேண்டாதவர்களுக்கும்,
விரும்பாதவர்களுக்கும் சேர்ந்து கூப்பாடு போடுவதாக இருக்கும்.
20. திராவிட நாட்டினர்களிற் பலர் தமிழ் மக்களில் எவரையும் அறிவாளி என்று
ஒப்பியதுமில்லை; ஒப்புவதுமில்லை. தமிழர்களில் எவரையும் தங்களின் தலைவனாக
ஏற்றுக்கொண்டதுமில்லை. ஏற்றுக்கொள்ளப்போவதுமில்லை.
21. திராவிட மக்களிற் பலரும் தமிழர்களிடமிருந்து பிரிந்து வாழவே
ஆசைப்படுகிறார்கள். குறை கூறுகிறார்கள். வைகிறார்கள். மனிதனை
மனிதனாகக்கூட மதிப்பதில்லை. இக்கூற்றை மெய்ப்பிக்க திராவிடத்தின் தலைவர்
என்று தன்னை சொல்லிக் கொள்ளுகிறவர் வீர உணர்ச்சியுள்ள தமிழ்நாட்டு
இளைஞர்களே "அதுகள்; இதுகள்" என அஃறிணைப்படுத்தி வைதும் செல்லுமிடமெல்லாம்
தமிழ்நாட்டுத் தலைவர்களை, அறிஞர்களை இழிவுபடுத்தி வைவதுமே போதுமான
சான்றாக இருந்து வருகிறது. இதனைப் பார்க்கும்போது திராவிடம் என்பதே
தமிழ்ப் பகைவர் பேச்சாக இருக்குமோ என்ற ஐயம் உண்டாகிறது.
22. 10 ஆண்டுகளாக திராவிடப் பேச்சு, பிரச்சாரம், பத்திரிகை, கிளை
அமைப்பு, பண வசூல், சுற்றுப் பிராயணம், கமிட்டி, தொண்டர்கள்,
உண்டியல்கள், ஆகிய 9-உம் தமிழ்நாட்டில் மட்டுமே நடைபெற்று வருவதால் அதை
தமிழ்நாட்டுக் கழகம் எனச் சொன்னாலும் சொல்லலாமே ஒழிய திராவிட நாட்டுக்
கழகம் எனச் சொல்லுவது உண்மைக்கு மாறானதாகும்.
23. தமிழ் நாட்டிற்குள்ளாக திராவிடம் பேசுவது, தமிழ் இளைஞர்களின்
தமிழ்ப்பற்றை, தமிழ் நாட்டுப் பற்றை, வீர உணர்ச்சியை வேண்டுமென்றே
வீணாக்கி, பாழ்படுத்துவதாக இருந்து வரும்.
24. காலம் செல்லச் செல்ல திராவிட நாடுகளுக்கும் சென்று, அங்கும்
பிரச்சாரம் செய்து அவர்களுக்கும் உணர்ச்சி ஊட்டி விடலாம் என்று எவரேனும்
கூறுவதானால், அவ்வாறு கூறுகிற அவர் தமது ஆற்றலைத் தவறாகக் கருதுகிறவர் என
முடிவு கட்டி விட வேண்டும்.
25. திராவிடர் எவரும் விரும்பாத திராவிட நாட்டை, திராவிடர் எவரும்
உறுப்பினரில்லாத திராவிடர் கழகத்தை, திராவிடர் எவரும் ஒப்புக் கொள்ளாத
திராவிடத் தலைவர், அரசியல் கழகமல்லாத ஒரு கழகத்தைக் கொண்டு "அடைந்தே
தீருவேன் திராவிட நாடு" என்றால் அது இல்லாத ஊருக்கு, போகாத பாதையை,
தெரியாத மனிதனிடம், புரியாத விதமாகப் பேசிக் கொண்டிருப்பது போலவே
இருக்கும்.
26. அப்படியே பிரிவதாக இருந்தாலும் திராவிடக் கூட்டாட்சியில் தமிழ் மொழி
அரசியல் மொழியாக இருக்குமா? அதனை திராவிட நாட்டார்கள் அனைவரும் ஒப்புவரா?
என்பதையும் ஒப்பிட்டுப் பார்ப்பது நலமாகும்.
27. அப்படியே ஒப்பினாலும் கூட்டாட்சியில் உறுப்பினராக இருக்கும்
வடமொழிப்பற்றும், வடசார்பும் உள்ள ஆந்திரர், மலையாளி, கன்னடியர், துளுவர்
ஆகிய நால்வருக்கும் எதிராக தமிழ் மொழிப்பற்றும் சார்பும் உள்ள ஒருவன்
இருந்து தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் நலன்களை வளர்க்க முடியுமா?
முடியாவிட்டாலும் பாதுகாக்கவாவது முடியுமா? என்பதும் எண்ணிப் பார்க்க
வேண்டிய ஒன்றாகும்-
28. அவ்விதமே முடிந்தாலும் அந்தக் கூட்டாட்சிக்கு உறுப்பினனாக தமிழ்
நாட்டின் தலைவனைத் தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டாமா? தேர்ந்தெடுக்க
தமிழ்நாடு முழுவதும் அடங்கிய ஓர் அமைப்பு வேண்டாமா? அத்தகைய அமைப்பு
திராவிடத் தலைவருக்கு போட்டியாகவும், அமைப்பை அமைக்கத் தொண்டு
செய்பவர்கள் பித்தலாட்டக்காரர்களாக, அயோக்கியர்களாகத் தோன்றவும் காரணம்
என்ன? என்பவைகள் அரசியல் அறிஞர்களால் ஆராய வேண்டியவைகளாகும்.
29. தமிழ் வாழ்க என்று கூறி தமிழ்நாடு தமிழருக்கே என அலறி தமிழர்
கழகத்தைத் தோற்றுவித்துத் தமிழர் மாநாடுகளைக் கூட்டி, தமிழ்க்கொடியை
உயர்த்தி, இந்தி எதிர்ப்பை நடத்தி, பண முடிப்புகளைப் பெற்றுக் கொண்ட
பிறகு, அவைகளை அடியோடு ஒழித்துவிட்ட திராவிடம் வளர்க எனக் கூறி, திராவிட
நாடு திராவிடருக்கே என அலறி திராவிட கழகத்தைத் தோற்றுவித்து, திராவிட
மாநாடுகளை நடத்தி, திராவிடக் கொடிகளை உயர்த்தி திராவிடர்க்கு போராட
வேண்டிய அவசியமும், அவசரமும் என்ன? என்பதற்கு திராவிடம் இதுவரை
பதிற்கூறவேயில்லை. தமிழ் வேறு, திராவிடம் வேறு என்பதற்கும், இரண்டும்
ஒன்றல்ல என்பதற்கும் இதுவும் போதுமான சான்றாகும்.
30. தமிழ்ப் பெரியார் என்றும், தமிழ்த் தாத்தா என்றும், தமிழ்நாட்டுத்
தலைவர் என்றும், தமிழ்நாட்டு தனிப்பெருந்தலைவர் என்றும், தமிழ் மக்கள்
அனைவரும் இந்தி எதிர்ப்புக் காலத்தில் அழைத்தும், சொல்லியும் வரலாற்றில்
எழுதியும் கூட அவர் தன்னை கன்னடியர் என்று நினைக்கிற நினைப்பும்,
முனைப்புமே இம்மாற்றத்திற்குத் காரணம் என்பதை அவர் இன்றுவரை மறுக்க
முன்வராததால், அது உறுதி செய்யப்பட வேண்டியதேயாகும்.
இதுகாறுங் கூறியவைகளைக் கண்டு
தமிழ் எது? திராவிடம் எது?
தமிழர் யார்? திராவிடர் யார்?
தமிழ்நாடு எது? திராவிட நாடு எது?
தமிழ் மக்களுக்கு வேண்டுவது எது?
என்ற இவையும், இவை போன்ற பிறவும் ஒருவாறு விளங்கியிருக்கும் என எண்ணி
உண்மையை விளக்க இவை போதும் என நம்பி இத்தோடு நிறுத்துகிறோம்.
நன்றி:",தமிழர் நாடு" இதழ், 1 மார்கழி 1980 (16.12.1949)
பேரா.கோ.வீரமணி தொகுத்த "முத்தமிழ்க் காவலர்" கி.ஆ.பெ.விசுவநாதம் நூலிருந்து.
மொழிபெயர்ப்பைக் காணவும்
9 மணிநேரம் · பொது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக